Offline

LATEST NEWS

புஷ்பா 2 விவகாரம் : அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்
Published on 01/07/2025 00:59
Entertainment

ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார். அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.

நடிகர் அல்லு அர்ஜூன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி போலீசாரால் கேட்கபட்ட 20 கேள்விகளுக்கு பதிலளித்தார். அதை தொடர்ந்து நாம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு வழங்கிய 14 நாள் காவல் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 27-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நிரந்தர ஜாமீன் வழங்க கேட்டு கொண்டனர். ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க போலீசார் கால அவகாசம் கேட்டதால், இவ்வழக்கு விசாரணை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ 1 லட்சம் பிணைத்தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments