நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு ஆண்டுதோறும் நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்களுக்கு பத்ம விருதுகளை அளித்து வருகிறது. கலை, சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன், பாடகர் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசு பத்ம விருதுபெறுவோரின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித் பெயரும் இடம்பெற்றுள்ளது. கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகே அவர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகி உள்ளார். இந்திய அரசு வழங்கும் ஆகப்பெரிய விருதுகளில் மூன்றாவது உயரிய விருது இதுவாகும்.
தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார் ஆகியோரும் பத்ம பூஷன் விருது பெறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் பத்ம விருதுகளைப் பெற உள்ளனர்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை இந்திய அரசு சனிக்கிழமை இரவு அறிவித்தது.
இதையடுத்து அஜித்துக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.