புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குருக்கலையாபட்டி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் விஷ்ணு. 7-ம் வகுப்பு படிக்கும் இவர் தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தனது கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாதது குறித்து எடுத்துக்கூறி, மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை குருக்கலையாப்பட்டி கிராமத்தில் அமைத்து கொடுத்தார். இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று திறந்து வைத்தார். அந்த குடிநீரில் சமைத்த உணவையும் அவர் சாப்பிட்டு மகிழ்ந்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”மாற்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து என்னால் முடிந்தவற்றை சொந்த பணத்தை வைத்து செய்து வருகிறேன். தற்போது ‘காஞ்சனா-4’ படத்தில் நடிக்கிறேன். இதன்பிறகு ‘பென்ஸ்’ என்ற படமும், ‘கால பைரவா’ என்ற படத்திலும் நடிக்கிறேன்.
நடிகை விஜயசாந்தியை தெலுங்கு சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கூறுவார்கள். அதேபோல் நயன்தாராவை கூப்பிடுவது தப்பில்லை, அவரும் நிறைய சாதனைகளை செய்துள்ளார். அதை தற்போது அவர் வேண்டாம் என்று சொல்கிறார் என்றால் அது அவரின் விருப்பம். நடிகர் விஜய் எனக்கு நண்பர். அவர் எடுத்துள்ள முயற்சியில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள். சினிமாவில் சாதியை திணிப்பது தவறு” என்றார்.