மும்பை,இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தமிழில் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக ‘பூல் பூலைய்யா 3’ படத்தில் நடித்திருந்தார். அனீஸ் பஸ்மி இயக்கிய இப்படத்தில் கார்த்தி ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சமீபத்தில் ஒரு வங்கியின் பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்ட பாலன், ‘பணம்தான் அதிகாரம்’ என்பதை புரிந்துகொண்டது தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறியுள்ளார். நிதி சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த உரையாடலில், பெண்கள் தங்கள் நிதியை பொறுப்பேற்க வேண்டியது ஏன் அவசியம் என்பது குறித்த தனது பார்வையை நடிகை வித்யா பாலன் பகிர்ந்து கொண்டார்.
“நான் ஒரு வருடத்துக்கு முன்புதான் பணம் என்பது ஒரு அதிகாரம் என்பதை உணர்ந்தேன். இது சம்பாதிப்பது அல்ல. இது உங்களது பொருளாதாரத்தை பொறுப்பேற்பதாகும். நீங்கள் பணத்தை எப்படி சேமிப்பது, செல்வு செய்வது, முதலீடு செய்வது என்பது தீர்மானிக்க வேண்டும். பணத்தை நிர்வகிப்பது உங்களுக்கு பலத்தையும் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளவும் உதவும். முக்கியமாக பெண்களுக்கு பணத்துக்காக மற்றவர்களை சார்ந்து இருக்கும்போது அது அவர்களை விருப்பமற்ற திருமணம், விரும்பிய வேலையை செய்ய முடியாமல் திணறடிக்கும்போது முக்கிய பங்கு வகிக்கிறது.
பலருக்கும் தங்களது கனவுகளை அடைய முடியாமல் இருக்க பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதார தன்னிறைவு ஒவ்வொருவருக்கும் முக்கியாமனது. ஆனால், அது பெண்களுக்கு கூடுதல் முக்கியமானது என்பேன்..போதுமான அளவுக்கு பணம் தேவைநான் திருமணம் செய்தபோது எனது அப்பா ‘இனிமேல் உனது வருவாயை உனது கணவர் பார்த்துக்கொள்வார்’ என்றார். அதற்கு நான், ‘ஏன் என்னை இதில் நம்பமாட்டீர்கள்? என்னுடைய பணத்தை வேறொருவர் ஏன் கவனிக்க வேண்டும்? இதுவரை நான் அதில் ஆர்வமில்லாமல் இருந்தேன். ஆனால், இப்போதிலிருந்து நான் இதைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்றேன்.
பணத்தை நிர்வகிப்பதுதான் முக்கியமானது. பல பெண்களுக்கு அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறதெனக் கூடத் தெரியாது. நான் என்னுடைய பணத்தை நான் நிர்வகிக்க ஆரம்பித்தபோது பணம் வளர்ச்சியடைய தொடங்கியது. எனது பார்வையும் மாறியது.பணம் மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணியல்ல. ஆனால், பொருளாதார சமநிலை உங்களுக்கு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க உதவும். அதிகமான வசதி தேவையில்லை. ஆனால், போதுமான பணம் தேவையானது. போதுமானது என்பதை உணர்வதுதான் உண்மையான அதிகாரம்” என்றார்.