மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகமாக ‘எல் 2 எம்புரான்’ வெளியாகியுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கடந்த 27-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை ‘எல் 2 எம்புரான்’ படைத்திருக்கிறது.
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் எம்புரான். வெற்றிகரமாக வசூலைக் குவித்துவரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கலவரம் சார்ந்த காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது.சர்ச்சை விரிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் சில காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளனர். எனினும் வலதுசாரி ஆதரவாளர்கள் மோகன்லாலுக்கு தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ‘எம்புரான்’ பட சர்ச்சை தொடர்பாக மோகன்லால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ” ‘எம்புரான்’ திரைப்படத்தின் சில பகுதிகள், ரசிகர்கள் பலரது மனதை புண்படுத்தி உள்ளது என்பதை அறிந்தேன். எந்த ஒரு அரசியல் கட்சி, கருத்தியல் மற்றும் மதத்திற்கு எதிராகவும் வெறுப்பை உண்டாக்கக் கூடாது என்பது, ஒரு கலைஞனாக என்னுடைய கடமையாகும். எனவே, நானும் ‘எம்புரான்’ படக்குழுவும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு பொறுப்பேற்கும் விதமாக சர்ச்சைக்குரிய பகுதிகளை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்” என கூறியுள்ளார்.