சென்னை,சென்னை சைதாப்பேட்டையில் 7 இடங்களில் குடிநீர் மையங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். குடிநீர் மையங்களை திறந்து வைத்த பின்னர், பொதுமக்களுக்கு நீர் மோர், பழ வகைகளை வழங்கினர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மதியம் 12 மணியில் இருந்து 3 மணி வரை, குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமான வேலை இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, “இந்த பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் முக்கியம். நாம் மட்டும் இல்லை தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என எல்லாமே நமக்கு முக்கியம் தான். எனவே உங்களால் முடிந்தவரை வீட்டின் வாசல், ஜன்னல், பால்கனி ஆகிய இடங்களில் பறவைகளுக்காக கொஞ்சம் தண்ணீர் எடுத்து வையுங்கள்” என பொது மக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.