Offline
பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு
By Administrator
Published on 04/26/2025 14:00
News

கராச்சி,காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நேற்று முன்தினம், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாகா எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.மேலும் இந்தியர்களுக்கான சார்க் விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்களாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் விமானங்களுக்கு தடை விதித்து வான்வெளியை மூடியது பாகிஸ்தான். இந்தியர்களுக்கு சொந்தமான, இந்தியர்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என்றும் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும் என்று அந்நாட்டு பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தான் பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.

Comments