காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைய முடியாது.இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை கடந்த வாரம் மூடிய நிலையில், இந்தியா தற்போது அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கை, சீனா அல்லது தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இனி இந்திய வான்வெளியைப் பயன்படுத்தாமல் சுற்றித்தான் செல்ல வேண்டும். இதன் மூலம் பயண நேரம் அதிகரிப்பதுடன் எரிபொருள் செலவும் அதிகரித்து, பாகிஸ்தானில் விமான டிக்கெட் கட்டணம் உயரும் நிலை உருவாகியுள்ளது.