கோலாலம்பூர்: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 தொடரின் முதல் சுற்றில் மலேசியாவின் எய்டில் சோலே அலி சாதிகின் அபாரமாக ஆடி, சீனாவின் வாங் ஜெங் சிங்கை 21-12, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். உலகத் தரவரிசையில் 48-வது இடத்தில் இருக்கும் எய்டில், 59 நிமிடம் போராடி இந்த வெற்றியைப் பெற்றார். இதன் மூலம், அவர் முதன்முறையாக உலக டூர் சூப்பர் 500 தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, எய்டில் இந்த சீசனில் இலங்கை சர்வதேச சேலஞ்ச் பட்டத்தை வென்றதுடன், ருய்சாங் மாஸ்டர்ஸ் போட்டியின் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ பெய் கீ-தியோ மெய் சிங் இணை தைவானின் இணை வென்றனர். கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் ஹூ பாங் ரோன்-செங் சு யின் இணை முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது. தேசிய வீரர்கள் யாப் ராய் கிங்-வலேரி சியோவ் இணையும் முதல் சுற்றை தாண்டவில்லை.