லண்டன்: நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியின் முன்கள வீரர் தைவோ அவோனியைக்கு அவசர வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து, அவர் குணமடைய உதவும் வகையில் தூண்டப்பட்ட கோமாவில் வைக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை லீசெஸ்டருக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த 27 வயதான நைஜீரிய வீரர் திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், கோமா அவரது அசைவுகளைக் கட்டுப்படுத்தவும், இதயத் துடிப்பை சீராக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. லீசெஸ்டருக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கோல் அடிக்க முயன்றபோது அவோனி கம்பத்தில் மோதினார்.
வலி இருந்தபோதிலும், ஃபாரஸ்ட் அனைத்து மாற்று வீரர்களையும் பயன்படுத்தியதால் அவர் தொடர்ந்து விளையாடினார். திங்கள்கிழமை மருத்துவக் குழுவினரால் அவோனியின் காயத்தின் அளவு கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஃபாரஸ்ட் உரிமையாளர் எவாஞ்சலோஸ் மரினாகிஸ் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்திற்குப் பிறகு அவோனி காயமடைந்தும் விளையாடியதால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக பயிற்சியாளர் நூனோ எஸ்பிரிடோ சாண்டோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவோனி நன்றாக குணமடைந்து வருவதாக ஃபாரஸ்ட் தெரிவித்துள்ளது.