Offline
Menu
ஈரானிலிருந்து தரைவழியாக இந்தியர்கள் வெளியேற அனுமதி
By Administrator
Published on 06/17/2025 09:00
News

தெஹ்ரான்:

ஈரானிய நகரங்கள்மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்துவரும் நிலையில், ஈரானிலுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற வகைசெய்யும்படி இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்குச் செவிமடுத்துள்ள ஈரான், தனது வான்வெளி மூடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் நில எல்லைப்பகுதிகள் வழியாக வெளியேறி, அஸர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் செல்லலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 10,000 இந்தியர்கள் ஈரானில் உள்ளனர் என்றும் அவர்களில் 2,000க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழலில், ஈரானிலுள்ள தனது குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது.

ஈரானில் பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) எக்ஸ் ஊடகம் வழியாகத் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, டெஹ்ரான் மருத்துவப் பல்கலைக்கழக அனைத்துலக மாணவர்களின் தங்குவிடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில், காஷ்மீரைச் சேர்ந்த இரு மாணவர்கள் காயமடைந்ததாக ‘இந்தியா டுடே’ செய்தி கூறியது. ஆயினும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவர்கள் ராம்சர் பகுதிக்கு இடமாற்றப்பட்டுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

நிலைமை கைமீறிச் செல்லுமுன் தங்களைப் பாதுகாப்பாக மீட்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈரானிலுள்ள இந்திய மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாள்களாக உறங்கவே இல்லை என்று அங்குள்ள இந்திய மாணவர்களில் ஒருவர் ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்குக் கடுமையான வெடிப்புச் சத்தம் கேட்டு, நிலவறைக்கு ஓடினோம். அதன்பிறகு இன்னும் கண் மூடவே இல்லை,” என்று இம்திசால் மொகிதின் என்ற அந்த 22 வயது மருத்துவ மாணவர் சொன்னார்.

Comments