பழைய கிளாங் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பார்க்கிங் பகுதியின் மூன்றாவது மாடியில் இருந்து கார் கழுவும் தொழிலாளி ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார். மாலை 5.38 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், 23 வயது இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த டொயோட்டா கேம்ரி கார் சம்பந்தப்பட்டது என்று கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறைத் தலைவர் முகமட் ஜம்சுரி முகமட் இசா தெரிவித்தார்.
கழுவிய பின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது, தொழிலாளி கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்செயலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதால், கார் சுவரில் மோதி தரையில் விழுந்ததாக நம்பப்படுகிறது என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது ஜம்சுரி கூறினார்.
கட்டிடத்தின் தரை மட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் ஐரிஸ், பெரோடுவா மைவி ஆகிய இரண்டு வாகனங்கள் மீது கார் மோதியது. அந்த நேரத்தில் அந்த வாகனங்களுக்குள் யாரும் இல்லை. பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் சிவப்பு மண்டலத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.