Offline
Menu
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை, வௌ்ளம்: 15 குழந்தைகள் உள்பட 43 பேர் பலி
By Administrator
Published on 07/08/2025 09:00
News

கெர்வில்லே:

அமெரிக்காவின் தென்மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வியாழக்கிழமை இரவு முதல் வௌ்ளிக்கிழமை அதிகாலை வரை 11 அங்குல கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாகாணத்தின் பல பகுதிகளில் வௌ்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன.

மலைப்பகுதியில் உள்ள கெர்கவுன்டியில் பெய்த தொடர் கனமழையால் குவாடலூப் ஆற்றின் நீரின் அளவு 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது. இதனால் ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நீரில் மூழ்கின. வௌ்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதில் 15 குழந்தைகள் உள்பட 43 பேர் பலியாகினர். மேலும் குவாடலூப் ஆற்றை ஒட்டிய இடத்தில் கோடைக்கால முகாமில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர். அவர்களில் 27 சிறுமிகள் உள்பட பல பெண்கள் மாயமாகி உள்ளனர். மாகாண பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த மழை, வௌ்ளம் குறித்து வானிலை ஆய்வு மையம் வௌ்ளிக்கிழமை அதிகாலையிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் இந்தளவுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை. இதனால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு அசாதாரண பேரழிவு. வௌ்ளத்தில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆயினும் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி தொடரும்” என தெரிவித்தார்.

Comments