Offline
Menu
மலேசியாவில் IIT வளாகம் – அன்வார், மோடி சந்திப்பில் முக்கிய தீர்மானம்!
By Administrator
Published on 07/08/2025 09:00
News

பிரேசிலில் நடைபெற்ற ப்ரிக்ஸ் மாநாட்டின் இடைவெளியில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்தனர். இச்சந்திப்பில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) வளாகத்தை மலேசியாவில் நிறுவும் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

IIT நிறுவங்கள் இந்தியாவின் உயர்தர பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாகும். உலக அளவில் மிகவும் மதிக்கப்படுகின்ற இவை, திறமையான மாணவர்களை உருவாக்குவதிலும், கண்டுபிடிப்பு மற்றும் புதுமை வளர்ச்சியிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ளவர்கள் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அத்துடன், வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்க மிகுந்த வாய்ப்பு இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.

இந்திய நிறுவனங்கள் டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் விமானத் தொழில்நுட்ப துறைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதையும் அவர் வரவேற்றார்.

பாலஸ்தீனம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகளில் நீதிமிக்க மற்றும் அமைதியான தீர்வுகளுக்காக இரு தலைவர்களும் உறுதிப் பதிவிட்டனர்.

அக்டோபரில் நடைபெறவுள்ள ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டை முன்னிட்டு, ஆசியான்-இந்தியா உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியை மலேசியா உறுதியாக ஆதரிக்கிறது.

2023-2024ம் ஆண்டு வரையிலான புள்ளிவிபரப்படி, 20.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்த இருநாட்டிற்கும் இடையிலான வர்த்தகம், மலேசியாவை ஆசியானில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மாற்றியுள்ளது.

Comments