நியூசிலாந்து, தனது பன்னாட்டு கல்வி சந்தையை 2034க்குள் இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தற்போது NZ$3.6 பில்லியன் மதிப்புள்ள இந்த துறை, NZ$7.2 பில்லியனாக உயர்வதையே இலக்காக அரசாங்கம் கொண்டு உள்ளது. கடந்த 2023 முதல் சர்வதேச மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதையடுத்து, இதனை வேகமாக வளர்க்க கல்வி அமைச்சர் எரிகா ஸ்டான்போர்டு திட்டம் வெளியிட்டுள்ளார்.இந்த திட்டத்தின் கீழ், வெளிநாட்டு மாணவர்களுக்கு பாகமாக வேலை செய்யும் நேரம் 20 மணிநேரத்திலிருந்து 25 மணிநேரமாக உயர்த்தப்படும். அத்துடன், அனுமதிக்கப்பட்ட பரிமாற்ற மற்றும் வெளிநாட்டு கல்வித் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பணி உரிமை வழங்கப்படும்.அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கான வரவுகளை கட்டுப்படுத்தும் சூழலில், நியூசிலாந்து அதிக வாய்ப்பு உள்ள சந்தைகளில் தனது பிரச்சார முயற்சிகளை திசைமாற்ற இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.முந்தைய ஆண்டில் 83,700 மாணவர்களாக இருந்த சேர்க்கையை, 2027ல் 1,05,000 மற்றும் 2034ல் 1,19,000 ஆக உயர்த்துவதே நோக்கமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இது ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.