கோலாலம்பூர்,
சுயேச்சை மத போதகர்களான ஸம்ரி வினோத் – ஃபிர்டாவ்ஸ் வோங் ஆகியோர் மீது குற்றம் சாட்டுவதில்லை என முடிவு செய்திருக்கும் தேசிய சட்டத்துறை தலைவருக்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் (ஜசெக), பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் (கெ அடிலான்), எஸ்.கேசவன் (சுங்கை சிப்புட்) ஆகிய நால்வரும் சட்டத்துறைத் தலைவரின் முடிவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு நேற்று நாடாளுமன்றத்தில் கூட்டாக நிருபர்கள் கூட்டத்தை நடத்தினர். ஸம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் ஆகியோர் மீது குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை என சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அளித்திருக்கும் விளக்கத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.