Offline
Menu
தாய்லாந்தில் இரண்டு மலேசியர்கள் மீது தீ வன்முறை – முன்னாள் குத்துச்சண்டை வீரர் கைது
By Administrator
Published on 08/10/2025 09:00
News

கோலாலம்பூர்,

தாய்லாந்து BANGKOKகில் வியாழக்கிழமை இரவு இரண்டு மலேசிய சுற்றுலா பயணிகளுக்கு மீது எரிமருந்து ஊற்றி, தீ வைத்த சம்பவத்தில், முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வரகோர்ன் புப் தாய் சோங், முன்னாள் பாதுகாப்பு காவலராகவும் பணியாற்றியவர். வேலை இழந்ததிலிருந்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தியதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார் என BANGKOK போலீஸ் தெரிவித்துள்ளது.

26 வயது ஓங் யிக் லியோங் மற்றும் 27 வயது கன் சியாவ் ஜென் ஆகியோர் நிலைமை ஸ்திரமாக உள்ளனர். விரைவில் அவர்கள் போலீசாருக்கு வாக்குமூலம் அளிக்கவுள்ளனர் என லம்பினி போலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கர்னல் யிங்யோஸ் சுவன்னோ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் ரட்சதாம்ரி சாலையில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலின் படிக்கட்டில் அமர்ந்திருந்த இருவரையும் குறிவைத்து நடைபெற்றது. சந்தேக நபர் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த இரசாயன திரவத்தை அவர்கள்மீது ஊற்றி, பின்னர் தீ வைத்துள்ளார்.

திடீரென தாக்குதலுக்குள்ளான இருவரும் தப்பிக்க முயன்றபோதும், சந்தேக நபர் பின்தொடர்ந்து அவர்களின் உடலில் தீப்பற்றி எரிய வைத்தார்.

காயமடைந்த மலேசியர்களான யிக் லியோங் போலீஸ் ஜெனரல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சியாவ் ஜென், கிங் சுலாலாங்கார்ன் நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற வரகோர்னை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தீயில் எரிந்த இருவருக்கும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி உதவி செய்வது அதில் பதிவாகியுள்ளது.

Comments