கோத்தா பாரு,
தாய்லாந்து அதிகாரிகளால் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நால்வர் இன்று மலேசியா திரும்பியதாக PDRM உறுதிப்படுத்தியது.
முகமது அஃபெண்டி அஹ்மத் (35), எரிடீகா முகமது நூர் (33), முகமது அலிப் தெராமான் (33), மற்றும் சுஹைரா நாஸ்ரின் (26) இன்று பிற்பகல் மலேசியா வந்தனர் என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்பிரிவு இயக்குநர் டத்தோ’ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு போலீஸ் தலைமையகத்தில் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடைபெற்றது; போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறை முடிவு வந்ததால், மாலை 6.30 மணிக்கு குடும்பத்தினருடன் சேர அனுமதிக்கப்பட்டனர் என கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ’ முகமது யூசுப் மாமட் தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் 1-ஆம் தேதி, 6,059 யாபா மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். எனினும், மேல் முறையீட்டுக்கான சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை தாய்லாந்து வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கத் தவறியதால், Narathiwat சிறை நீதிமன்றம் அவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்களை விடுதலை செய்தது.