புத்ராஜெயா,
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி (AKPS) மற்றும் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவு (AVSEC) இணைந்து, KLIA Terminal 1இல் சட்டவிரோத தங்க வியாபாரம் மற்றும் ஸ்மார்ட்போன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பங்களாதேஷ் நாட்டு ஆண்களை கைது செய்தது.
இந்த சோதனையில், மொத்தம் RM187,742.10 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், சுமார் RM160,000 மதிப்புள்ள தங்க நகைகள் (3), RM22,700 மதிப்புள்ள 12 பிராண்டு ஸ்மார்ட்போன்கள், RM5,042.10 ரொக்கம் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களுக்கு சொந்தமான 5 சர்வதேச கடவுச்சீட்டுகள் அடங்கும்.
மூவர் 1963 குடிநுழைவு விதி 39(b) ஐ மீறி அனுமதி நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டிலும், ஒருவர் 1959/63 குடிநுழைவு சட்டத்தின் பிரிவு 6(1)(c) கீழ் செல்லுபடியாகும் அனுமதி அல்லது பாஸ் இன்றி நாட்டில் நுழைந்து தங்கியதற்கும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது தொடர்பாக போலீஸ் புகாரும் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் செலாங்கூர் குடிநுழைவு துறையின் அமலாக்க பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என AKPS தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், Terminal 2 (T2)வில், மூன்று வேறு வழிமுறைகளில் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழையவும், வெளியேறவும் முயன்ற மூன்று சம்பவங்களை AKPS முறியடித்தது. இதில் ஆறு கம்போடியர்கள், மூன்று இந்தோனேசியர்கள் மற்றும் ஒரு சீன நாட்டு நபர் அடங்குவர்.
மேலும், குடிநுழைவு சோதனைகளைத் தவிர்க்க முயன்ற ஏழு இந்தியர்கள் மற்றும் ஐந்து பாகிஸ்தானியர்களும் நுழைவு மறுக்கப்பட்டு, “நுழைவு மறுப்பு அறிவிப்பு” (NPM) வழங்கப்பட்டு, விரைவான விமானத்தில் தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.