ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார். இதனால் இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உமரியா கிராமத்தில் ‘பிரஹ்மா’ பெம்ல் (BEML) ரயில் உற்பத்தி மையத்திற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், “இந்தியா இவ்வளவு வேகமாக வளர்வதைச் சிலர் விரும்பவில்லை. எல்லாருக்கும் முதலாளி நான் தான் என நினைக்கும் சிலர் இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று யோசிக்கிறார்கள்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை அதிக விலை கொண்டதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இதன் மூலம் விலை உயர்ந்து, உலக நாடுகள் அவற்றை வாங்குவதை நிறுத்தும் என நினைக்கிறார்கள்.
இதற்காகவே இந்த முயற்சி நடந்து வருகிறது. ஆனால் இந்தியா முன்னேறி வரும் வேகத்தில், எந்த உலக சக்தியாலும் நாம் ஒரு வல்லரசாக மாறுவதைத் தடுக்க முடியாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.