ஷா ஆலம்,
கிள்ளானில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில், உலோக கட்டமைப்பில் சாயம் பூசிக் கொண்டிருந்த தொழிலாளி ஏழு மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
துணை ஒப்பந்ததாரரின் கீழ் பணியாற்றிய அந்த ஊழியர் நேற்று காலை 11.45 மணியளவில் ஏ வகை சாரக்கட்டு தளத்தைப் பயன்படுத்தி பணியாற்றும் போது இந்த விபத்து ஏற்பட்டது.பலத்த காயங்களால் அந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
சம்பவம் குறித்து சிலாங்கூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (ஜே.கே.கே.பி.) புலனாய்வாளர்களை விசாரணைக்காக அனுப்பியுள்ளது.
பரிசோதனையில் தொழிலாளி ஏழு மீட்டர் உயரத்தில் பணிபுரிகையில் விழுந்ததுதான் விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டது.
உடல் மேலதிக விசாரணைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை, கட்டுமான தளத்தில் உயர்ந்த இடங்களில் நடைபெறும் அனைத்து பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என முதலாளிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பான பணிமுறை வழங்குவதில் முதலாளிகள் தவறியதால் தொழில் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் தடை அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1994ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் 15(1) பிரிவின் கீழ் சம்பவத்துக்கான காரணம் மற்றும் பொறுப்பாளர்களை கண்டறிய விசாரணைகள் தொடர்கின்றன.