ராமநாதபுரம்,
மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் மலேசிய உணவகம் ஒன்றைத் தொடங்கி சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்துள்ளார் ஷேட் இப்ராஹிம்.
“ஜூலை 1 முதல் ‘தொம்யாம் மலேசியா’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில், மலேசியாவின் புகழ்பெற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன,” என அவர் தெரிவித்தார்.
37 வயதான இப்ராஹிம் கூறியதாவது, கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்த அவரது நண்பர் முஹமாட் சிக்கந்தர் கனி நாடு திரும்பிய பின்னர், அவருடன் இணைந்து இந்த உணவகத்தைத் தொடங்கும் யோசனை உருவானது.
2008ஆம் ஆண்டு ஜோகூர் பாருவில் பாத்திரங்கள் கழுவும் பணியில் துவங்கி, பின்னர் பினாங்கில் சமையல் வேலையில் ஈடுபட்ட இப்ராஹிம், அந்த காலகட்டத்தில் நாசி லெமாக், சாத்தே, தொம்யாம் போன்ற பல மலேசிய உணவு வகைகளையும் சமைக்கக் கற்றுக்கொண்டார்.
“நான் மலேசியாவில் சமைக்கக் கற்றுக்கொண்டேன். மலேசிய உணவு எனக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவகத்தைத் தொடங்கினேன். தமிழ்நாட்டில் இதை இவ்வளவு பேர் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், உணவகத்தின் பெயரும், உணவுப் பட்டியலும் மலாய் மொழியில் இருப்பது, வாடிக்கையாளர்களிடையே கூடுதல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.