திருச்சூர்,மத்திய மந்திரியும், நடிகருமான சுரேஷ் கோபி, கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கடந்த 3 மாதங்களாக தொகுதி பக்கமே வரவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. அதன் தலைவர் கோகுல் குருவாயூர், சுரேஷ் கோபியை காணவில்லை என்று திருச்சூர் கிழக்கு போலீசில் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். இன்று நேரில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதுபற்றி கோகுல் குருவாயூர் கூறியதாவது;
“மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தொகுதி பக்கம் வராததுடன், சத்தீஷ்கர் மாநிலத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. திருச்சூர் மாநகராட்சி சார்பில், ஒரு மத்திய அரசு திட்ட தொடக்கவிழாவுக்கு அவரை அழைக்க அதிகாரிகள் முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொகுதி மக்களும் அவரை அணுக முடியவில்லை. அவரை கண்டுபிடிக்கக்கோரி, 11-ந் தேதி சுவரொட்டி பிரசாரத்தை தொடங்கப் போகிறோம்.” என்றார்.