ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், “சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழிப்போம். நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நீங்கள் நினைத்தால், பாதி உலகத்தையே எங்களுடன் அழைத்துச் சென்றுவிடுவோம்” என்று தெரிவித்தார்.
இந்தியாவிற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் பகிரங்க மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அணு ஆயுதம் குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்காவிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம். இந்த கருத்துக்கள் நட்புரீதியான மூன்றாவது நாட்டின் மண்ணிலிருந்து கூறப்பட்டிருப்பதும் வருந்தத்தக்கது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.