பத்து கேவ்ஸ்,
பத்து கேவ்ஸ் தாமான் சமுத்ரா அடுக்குமாடி குடியிருப்பு, மனிதர்கள் வாழத்தகுதி இழந்த நிலைக்கு சென்றுவிட்டதாக தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இந்திய சமூகத்தினர் வசிக்கும் இந்த பி40 வகை குடியிருப்புகளில், கடந்த 15 ஆண்டுகளாக குடியிருப்பாளர்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகள், அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஆரோக்கியத்துக்கு ஆபத்தான சூழல்
கழிவு நீர் தொட்டிகளில் இருந்து வரும் துர்நாற்றம் மற்றும் புழுக்களால் நிரம்பிய கழிவுநீர், முற்றங்களில் வெள்ளம் போல பெருக்கெடுப்பதாகவும், குடியிருப்பு பகுதி கொசுக்களின் இனப்பெருக்க மையமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் சுற்றுச்சூழல் தூய்மையின் நிலை கவலைக்கிடமாகவும், குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகவும் உள்ளது.
அடிப்படை வசதிகள் முற்றிலும் பாதிப்பு
படிக்கட்டுகளில் உள்ள விளக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயலிழந்து சரிசெய்யப்படவில்லை. மேலும், படிக்கட்டுத் தடுப்புகள் இல்லாததால் முதியவர்கள் உட்பட பலர் வழுக்கி விழும் அபாயத்தில் உள்ளனர்.
அரசு உடனடி தலையீடு கோரிக்கை
“இத்தகைய அவல நிலையில் வாழும் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக சிலாங்கூர் மந்திரி புசார் தலையிட்டு தீர்க்க வேண்டும். இல்லையெனில் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்குகள் கிடைக்காது,” என ஸ்ரீ ரமேஷ் எச்சரித்தார்.