புத்ராஜெயா,
பகடிவதை, துன்புறுத்தல், அவமதிப்பு மற்றும் இணையம் உட்பட அடையாளத் தகவல்களை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக, அரசாங்கம் தண்டனைச் சட்டத்தில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்ததாவது, இந்தத் திருத்தம் 2025 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டம் (திருத்தம்) [சட்டம் A1750] மூலம் சேர்க்கப்பட்டுள்ளது.
அவரின் கூற்றுப்படி, இந்த சட்டத் திருத்தம் கடந்த பிப்ரவரி 25 அன்று அரச ஒப்புதலைப் பெற்று, மார்ச் 7 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் கீழ் 507B முதல் 507G வரை புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை, இணையம் உள்ளிட்ட எந்தவொரு வகையிலும் செய்யப்படும் பகடிவதைச் சம்பவங்களை தடுக்கும் நோக்கத்துடன் அமுல்படுத்தப்படுகின்றன.
மேலும், பகடிவதை, அச்சுறுத்தல், கொடுமைப்படுத்தல், அவமதிப்பு, அடையாளத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் அல்லது தற்கொலை முயற்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்குதல் போன்ற குற்றங்கள் இதில் அடங்கும். தூண்டுதலின் விளைவாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் இதன் கீழ் வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் குற்றங்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
“ஆகையால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்,” என்று அசாலினா வலியுறுத்தினார்.