பெங்களூரு,கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முத்யாலம்மா கோவில் அருகே கடந்த 7-ந் தேதி காலையில் பாலிதீன் பையில் ஒரு கை இருந்தது. கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு பையில் இன்னொரு கை இருந்தது. மேலும் கை கிடைத்த பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் கிடைத்தன. மறுநாள் (8-ந் தேதி) கோவிலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தலை மற்றும் உடலின் மற்ற பாகங்கள் பாலிதீன் பைகளில் சிக்கியது.
அந்த உடல் பாகங்கள் ஒரு பெண்ணுக்கு உரியது என்பதையும், அவரை கொன்று 19 துண்டுகளாக வெட்டி, கொரட்டகெரேயில் இருந்து 30 கிலோ மீட்டர் வரையும் 18 இடங்களில் பாலிதீன் பைகளில் உடல் பாகங்களை வைத்து மர்மநபர்கள் வீசியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்த கொடூர கொலை நடந்தது போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தொகுதி என்பதால், துமகூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது துமகூரு புறநகர் பெல்லாவியை சேர்ந்த லட்சுமி தேவம்மா என்பவர் கடந்த 3-ந் தேதி காணாமல் போனதும், அவரை தான் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதையும் போலீசார் உறுதி செய்தார்கள். இதனை ஏற்க லட்சுமி தேவம்மாவின் கணவர் பசவராஜ் மறுத்து விட்டார். ஆனாலும் லட்சுமி தேவம்மா தான் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்த போலீசார், கொலையாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டினார்கள்.
இந்த நிலையில், துமகூருவில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கில், அதாவது லட்சுமி தேவம்மாவை தீர்த்து கட்டியதாக அவரது மருமகன் ராமசந்திரா, இவருடைய நண்பர்கள் சதீஸ், கிரண் ஆகிய 3 பேரையும் கொரட்டகெரே போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரட்டகெரேயில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், லட்சுமி தேவம்மாவின் மருமகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ராமசந்திரா பல் டாக்டர் ஆவார். அவர் தனது நண்பர்கள் உதவியுடன் மாமியார் லட்சுமி தேவம்மாவை கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி 30 கிலோ மீட்டர் வரைக்கும் சாலையில் வீசி எறிந்து இருந்தார்.
முதலில் கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினோம். அப்போது கடந்த 6-ந் தேதி ஒரு கார் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. அந்த காரின் பதிவெண் மூலமாக உரிமையாளரான சதீசையும், அவருடன் இருந்த நண்பர் கிரணையும் பிடித்து முதலில் விசாரித்தோம்.