Offline
Menu
சிலாங்கூர் சுல்தான் 25 ஆண்டு ஆட்சியை முன்னிட்டு ‘SIS’ சிறப்பு எண் பலகை ஏலம்
By Administrator
Published on 08/13/2025 09:00
News

புத்ராஜெயா,

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் அரியணை ஏறி அடுத்த ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சாலை போக்குவரத்து துறை (JPJ) ‘SIS’ எனும் சிறப்பு வெள்ளி விழா வாகன எண் பலகை தொடரை அறிமுகப்படுத்துகிறது.

JPJ வெளியிட்ட அறிக்கையில், இந்த ‘SIS’ (Sultan Idris Shah) என்ற சுருக்கப் பெயரைக் கொண்ட பிரத்தியேக எண் பலகைகளுக்கான ஆன்லைன் ஏலம் ஆகஸ்ட் 15 முதல் 19 வரை Sistem JPJeBid தளத்தின் மூலம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஏல முடிவுகள் ஆகஸ்ட் 20 அன்று அறிவிக்கப்படும்.

இந்த எண் பலகை தொடர், மாநிலத்தின் ஒன்பதாவது சுல்தானாக 2001ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அவர்களுக்கு கௌரவமாக வெளியிடப்படுகிறது.

JPJ, ஏலத்தில் வென்றவர்கள், பெற்ற எண்களை ஏலம் முடிந்த 12 மாதங்களுக்குள் தங்கள் வாகனத்தில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, சிலாங்கூர் அரச அலுவலகம் தெரிவித்ததாவது, வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மேன்மை தங்கிய சுல்தானின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் முன்னிட்டு, இந்த சிறப்பு எண் பலகை வெளியிடப்படுகிறது.

Comments