குவந்தான்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி கெந்திங் ஹைலண்ட்ஸில் இருந்து திருடப்பட்ட 300 கேசினோ Chipsகளில், 200 சிப்புகள் (மொத்த மதிப்பு RM2 மில்லியன்) போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியான செய்தி அறிக்கைக்கு பின், ஒருவர் போலீசாரிடம் 200 கேசினோ Chipsகளை ஒப்படைத்தார். ஒவ்வொரு சிப்பும் RM10,000 மதிப்புடையது. இவர், ‘ஜங்கெட்’ (Junket) எனப்படும் சந்தேக நபரிடமிருந்து கெந்திங் கிராண்ட் ஹோட்டல் லாபியில் கைமாற்று முறையில், எந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தமுமின்றி வாங்கியதாக பஹாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் கூறினார்.
போலீசார் இன்டர்போல் (Interpol) உதவியுடன், மீதமுள்ள 100 Chipsகளை (மொத்த மதிப்பு RM1 மில்லியன்) எடுத்துக்கொண்டு வெளிநாடு தப்பியோடிய சந்தேக நபரைத் தேடி வருகின்றனர். அவர், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) வழியாக நாடு விட்டுச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகள், சந்தேக நபர் Chipsகளை எடுத்துக்கொண்டு, வாகன நிறுத்துமிடத்திற்கு சென்றதும், அவசரமாக கெசினோவை விட்டு புறப்பட்டு அதே நாளில் KLIA-க்கு சென்றதும் பதிவாகியுள்ளது. இந்த வழக்கு, குற்ற நம்பிக்கையை மீறியதாக குற்றவியல் சட்டம் பிரிவு 408-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 32 வயது ஜங்கெட் நிறுவன மேலாளர் ஒருவர், கெசினோவில் மூடப்பட்ட அறைக்குள் இருந்த Chipsகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.