புனோம் பென்:
கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் முயற்சிகள் தீவிரமடையும் நிலையில், ஏழு நாடுகளைக் கொண்ட தற்காலிக பார்வையாளர் குழு பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடுவதற்காக நேற்று எல்லைப் பகுதிக்கு வருகை தந்தது.
மலேசிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் நஸ்லி அப்துல் ரஹ்மான் தலைமையிலான இந்தக் குழு எல்லைப் பகுதியில் சமீபத்திய முன்னேற்றங்களை மதிப்பீடு செய்ய கள ஆய்வு மேற்கொண்டது.
கம்போடிய வெளியுறவு மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு அமைச்சின் பேச்சாளர் சம் சௌன்ரி தெரிவித்ததாவது, எல்லையில் மோதல்கள் அதிகரிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் கண்காணிப்பு நடவடிக்கையில் மலேசியா உதவ வேண்டும். பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை பாதுகாக்கவும், வலுவான மற்றும் நியாயமான கண்காணிப்பு செயல்முறையை உடனடியாக நிறுவவும் மலேசியாவை கம்போடியா வலியுறுத்துகிறது.
இந்த தற்காலிக பார்வையாளர் குழுவில் ஆசியான் உறுப்பினர் நாடுகள் புருணை, இந்தோனேசியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளனர். கம்போடிய பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, அவர்கள் பான்டே மீன்ச்சே மாநிலத்தில் உள்ள போயுங் டிராகவுன் எல்லை சோதனைச் சாவடியையும் பார்வையிட்டனர்.
இந்த பார்வையாளர் குழு, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற கம்போடியா-தாய்லாந்து பொதுத் எல்லைக் குழு (GBC) சிறப்புக் கூட்டத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பிரதேசத்தில் நடந்த ஆயுத மோதலுக்கு பின்னர், கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இணைந்து மலேசியா முக்கிய பங்கை வகித்தது. இந்த மோதல் ஜூலை 28-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.