இந்தியா – மலேசியா இடையே இருவழி உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நலனுக்காக இருவழி உறவுகளும் ஒத்துழைப்புகளும் தொடர்ந்து காலத்திற்கேற்ப வலுப்பெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தேசப்பற்று கொண்டாட்டங்களுடன் சிறப்பு விழா நடந்தேறியது. இந்த விழாவில் கோலாலம்பூரில் உள்ள இந்தியா ஹவுசில் தூதர் ரெட்டி இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அந்த நாட்டின் 79ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்து பேசும்போது இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவின் ஜனநாயக மதிப்புகள், பொருளாதார முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துரைத்தார். மேலும், இந்தியா மலேசியா நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பல துறைகளில் வலுப்பெற்று வருவதாகவும் குறிப்பாக வர்த்தகம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும் ரெட்டி தெரிவித்தார்.
கொடியேற்ற விழாவில், தூதரக அதிகாரிகள், மலேசியாவில் வசிக்கும் இந்திய சமூக உறுப்பினர்கள், வணிகத்துறையினர், மாணவர்கள், கலாச்சாரப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழா கொடியேற்றம், இந்திய தேசிய கீதத்துடன் தொடங்கி, பின்னர் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்த்துச் செய்தியும் பகிரப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக, இந்திய கலாச்சாரக் குழுக்கள் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், தேசப்பற்று பாடல்களை வழங்கினர். மேலும், விருந்தினர்களுக்கு இந்திய பாரம்பரிய உணவுகளும் வழங்கப்பட்டன. இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த விழா, மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கு, இருநாட்டு மக்களுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.