பெங்களூரு,தலைநகர் டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் அனைத்து நாய்களையும் பிடித்து, அவற்றை 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இதுவரை 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளோம் என எச்.டி.குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி. போஜேகவுடா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக சட்டசபையில் பேசிய போஜேகவுடா, “நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடிய முதல் மாநிலமாக கர்நாடகம் இருக்கட்டும்.
எங்களுக்கும் விலங்குகள் மீது அக்கறை உள்ளது. ஆனால் நாய்க்கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை நீங்கள் பார்க்கவில்லையா? தினமும் பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வரும் செய்திகளை நீங்கள் பார்க்கவில்லையா? இது தினந்தோறும் நடக்கிறது.
நான் சிக்மகளூர் நகராட்சி தலைவராக இருந்தபோது, நாய்களின் உணவில் விஷத்தை சேர்த்து சுமார் 2,800 நாய்களை கொலை செய்தோம். பின்னர் அவற்றை தென்னை மரங்களுக்கு அடியில் புதைத்தோம். நமது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறைக்கு செல்லவும் தயார்” என்று தெரிவித்தார். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போஜேகவுடாவின் பேச்சு கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.