சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று பேசியது புதிய சாதனையாக மலர்ந்துள்ளது. இன்று அவர் 103 நிமிடங்கள் சுதந்தர தின உரையாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது 98 நிமிடங்கள் பேசியதுதான் சாதனையாக இருந்தது. இன்று அந்த தனது சாதனையை பிரதமர் மோடியே முறியடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
2017-ம் ஆண்டு பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது 56 நிமிடங்கள் பேசினார். அதுதான் அவரது குறைந்த நேர சுதந்திர தின உரையாகும்.
இந்த சுதந்திர தினத்தில் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதன் மூலம் பிரதமர் மோடி மற்றொரு புதிய சாதனையும் படைத்து இருக்கிறார். நேருவுக்கு அடுத்தபடியாக அதிக தடவை சுதந்திர தின கொடி ஏற்றியவர் என்ற சிறப்பு அவருக்கு கிடைத்து உள்ளது. இதுவரை 2-வது இடத்தில் இருந்த இந்திரா காந்தியின் சாதனையை இன்று பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.
பிரதமர் மோடி போன்று 1947-ல் ஜவகர்லால் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றியுள்ளார். 1997-ல் அப்போதைய பிரதமர் குஜ்ரால் 71 நிமிடங்கள் பேசினார். மிக மிக குறைவான சுதந்திர தின உரையாக 1954-ம் ஆண்டு நேருவும், 1966-ம் ஆண்டு இந்திரா காந்தியும் பேசிய தலா 14 நிமிடங்கள்தான் குறைவான உரையாகும்.
மன்மோகன்சிங், வாஜ்பாய் ஆகிய இருவரும் சுதந்திர தின உரையை அதிகமாக பேசியது கிடையாது. அவர்கள் இருவரும் சராசரியாக 30 நிமிடங்களே சுதந்திர தின உரையாற்றி உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி அவர்களை விட 3 மடங்கு அதிகமாக பேசி சாதனை படைத்து இருக்கிறார்.