மும்பை மற்றும் புறநகரில் நேற்று இரவு விடிய விடிய இடைவிடாமல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. சயானில் உள்ள சண்முகாந்தா ஹாலை சுற்றி சுமார் 1 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கியது.
அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குர்லா, செம்பூர், கிங்சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விரைவு சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
தேவையில்லாமல் வீடுகளை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை அருகே உள்ள விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதம் அடைந்தது. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிர் இழந்தனர். காயம் அடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மும்பை தவிர பால்கர், தானே, ரத்னகிரி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மும்பை மற்றும் ராய்காட் மாவட்டத்தில் இன்று மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.