ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள், அதிகரித்து வரும் ஊதியச் செலவுகளும் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
நிதிச் சுமை அதிகரித்ததால் பல பல்கலைக்கழகங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பணிபுரியும் சுமார் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் பாதிப்படைந்துள்ள துறை மானுடவியல் (Humanities) ஆகும். அனைத்துலக மாணவர்கள் இத்துறையில் அதிக ஆர்வம் காட்டாததோடு, விசா கட்டணம் மற்றும் கல்விக் கட்டணச் சுமை அவர்களின் சேர்க்கையை மேலும் குறைத்துள்ளதாக கல்வி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் கல்வித் தரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதற்கு முன்னர், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) 2026க்குள் 208.6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவினத்தை குறைக்கும் நோக்கில் 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீக்கப் போவதாக அறிவித்தது. அதேபோன்று, வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் 400 பணியிடங்களை குறைக்கும் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.