குவந்தான்,
பாகாங், சுங்கை லெம்பிங் அருகே சுங்கை பயாஸ் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர் விடுதியில் இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு நடந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள், பங்களாதேஷ் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் உள்ளூர் நபர் ஆவார். இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவருடன் அதே தொழிலாளர் விடுதியில் தங்கியிருந்தவர்கள் என குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அஷாரி அபூ சமா கூறினார்.
போலீசாரின் ஆரம்பவிசாரணையில், சந்தேக நபர்களில் ஒருவன், மதுபோதையில் சண்டையில் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
“கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. அதேசமயம் நான்கு இரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த 42 வயது வெளிநாட்டு நபர், குவந்தான் தெங்க்கு அம்புவான் ஆஃப்ஸான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் உயிரிழந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரும் நேற்று முதல் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.