பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேர்தல் கமிஷன் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறிய அவர், பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்த தரவுகளையும் வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி வரும் பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.இத்தகைய வாக்காளர் பட்டியல் மோசடிகளுக்கு எதிராக ராகுல் காந்தி தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீகாரில் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தார்.
‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை பீகாரின் சசாரம் என்ற இடத்தில் இன்று தொடங்குகிறது.மாநிலம் முழுவதும் 16 நாட்களாக 1,300 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி தலைநகர் பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.
ராகுல் காந்தியின் இன்றைய யாத்திரையில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி மற்றும் பீகாரின் மெகா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.இதைப்போல யாத்திரை நிறைவில் பாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ராகுல் காந்தி எப்போதெல்லாம் ஒரு யாத்திரைக்கு புறப்படும்போது, இந்த நாட்டின் ஜனநாயகம் ஒரு பக்கத்தை புரட்டுகிறது. வாக்காளர் உரிமை யாத்திரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணமாக இருக்கும். நமது ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
பா.ஜ.க. கூறி வரும் இரட்டை என்ஜினின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷன் மாறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம். இதற்கு எதிராக போராடி வருகிறோம், எதிர்காலத்திலும் போராடுவோம்.வாக்கு திருட்டு சதிகாரர்கள் பின்வாங்க மாட்டார்கள், அவர்கள் வாக்குகளைத் திருட முயற்சிப்பார்கள் என்பதால் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கான ஒரு பயணம் இது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற உரிமைக்காக போராட திட்டமிட்ட யாத்திரை இது.