கோலாலம்பூர்:
வியட்நாம், லாவோஸ் நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கஜிகி புயல் (Typhoon Kajiki), தற்போது தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் நிலச்சரிவுகளையும், வெள்ளத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தப் புயலால், குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தற்போது வெப்பமண்டல தாழ்வு மண்டலமாகப் பலவீனமடைந்துள்ள இந்தப் புயல், தாய்லாந்தில் உள்ள நான், சியாங் ராய், மே ஹாங் சன் மற்றும் சியாங் மாய் போன்ற மாகாணங்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
அதுமட்டுமின்றி, திடீர் வெள்ளத்தால் பாலங்கள் சேதமடைந்துள்ளன, சில கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏழு பேரைக் காணவில்லை. மேலும், 1,800 குடும்பங்களைச் சேர்ந்த, 6,300-க்கும் மேற்பட்ட மக்கள் கஜிக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், தாய்லாந்து வானிலை ஆய்வு மையம், அடுத்த வாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. இது மட்டும் இன்றி, கடுமையான வானிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதலுடன் தொடர்புடையவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.