சென்னை:
சாலைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் செய்வதை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார் கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தில் போக்குவரத்து நிறுத்தங்களில் குழந்தைகளை வைத்து யாசகம் செய்யும் நிலையை கட்டுப்படுத்த, மரபணு (DNA) பரிசோதனை பயன்படுத்தப்படுவதாக எடுத்துக்காட்டினார்.
“குழந்தைக்கும், அதை வைத்து யாசகம் கேட்பவருக்கும் பரிசோதனை நடத்தப்படும். குழந்தை அவர்களுடையது அல்ல எனத் தெரிய வந்தால், அந்தக் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல், சென்னையிலும் யாசகம் கேட்கும் குழந்தைகளின் மரபணுவை பரிசோதித்து, உண்மையான பெற்றோருடன் இல்லாவிட்டால் மீட்டு, மாநகராட்சியின் குழந்தை மீட்பு மையங்களில் பராமரித்து தரமான கல்வி வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “இது ஒரு நல்ல யோசனை. சென்னை மாநகராட்சியில் இதை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,” என்று கூறினார்.