கோலாலம்பூர்:
வரும் செப்டம்பர் 1 முதல், சிங்கப்பூரில் மின் சிகரெட் பயன்பாட்டிற்கான சட்டங்கள், மேலும் கடுமையாக்கப்பட உள்ளன. இதன்படி, மலேசியர்கள் உட்பட, வெளிநாட்டினர், இ-சிகரெட்டுகளை வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ, நாடு கடத்தப்பட்டு, நிரந்தரமாக நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும். குற்றம் செய்வோரின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, தொடர்ந்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, பணி அல்லது மாணவர் அனுமதி ரத்து செய்யப்படுவது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
‘கேபாட்ஸ்’ (Kpods) எனப்படும், போதைப்பொருள் கலந்த மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சாதனங்களை வைத்திருந்தாலோ, அல்லது பரிசோதனையில், போதைப்பொருள் பயன்பாடு உறுதியானாலோ, அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்வார்கள்.
இதனிடையே சாங்கி விமான நிலையத்தில், மின் சிகரெட்டுகளை அப்புறப்படுத்துவதற்கான தொட்டிகள் வைக்கப்படும். 18 வயதுக்குட்பட்ட முதல் முறை குற்றவாளிகளுக்கு 500 சிங்கப்பூர் டாலரும், பெரியவர்களுக்கு 700 சிங்கப்பூர் டாலரும் அபராதமாக விதிக்கப்படுமாக.
சிங்கப்பூர், ‘மின் சிகரெட் எனும் சீரழிவை’ (vaping scourge) எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் அல்லது தங்கியிருக்கும் மலேசியர்கள் இந்த புதிய, கடுமையான சட்டங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இ-சிகரெட்டுகள் வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும்.