கேமரன் ஹைலேண்ட்ஸ்:
இங்கள்ள பத்து 28, ஜாலான் தாப்பா-ரிங்லெட்டில், ஓடும் கார் மீது மரம் விழுந்ததில் இரண்டு வெளிநாட்டினர் லேசான காயங்களுக்கு ஆளானார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான (UNHCR) அடையாள அட்டைகளை வைத்திருக்கும் 40 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும், மாலை 5 மணியளவில் பெரோடுவா அல்சாவில் பயணித்தபோது, இந்த சம்பவம் நடந்தது என்று, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் ரிங்லெட் தீயணைப்பு நிலையத்திற்கு மாலை 5.09 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக நான்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
“அங்கு வந்தபோது, தாப்பா நோக்கிச் சென்று கொண்டிருந்த அல்சா மீது ஒரு மரம் விழுந்திருப்பதைக் கண்டறிந்தோம். ஓட்டுநரோ பயணியோ காரினுள் சிக்கவில்லை, இருவரும் ஏற்கனவே வாகனத்திலிருந்து வெளியேறிவிட்டனர். “தீயணைப்பு வீரர்கள் காரிலிருந்து கிளைகளை அகற்றி சாலையோரத்திற்கு மாற்றினர் என்றும், மாலை 6.40 மணிக்கு நடவடிக்கை முடிந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.