கோலாலம்பூர்:
நாட்டின் 68வது தேசிய தினத்தை முன்னிட்டு, மலேசியர்களிடையே ஒற்றுமையும் நாட்டுப்பற்றும் வலுப்பெறச் செய்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை (ஆக. 30) சிறப்புரையாற்ற உள்ளார்.
செர்டாங் வேளாண் கண்காட்சிப் பூங்கா (MAEPS) வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் அரசு ஊழியர்கள், சீருடைப் பணியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்கள் உள்ளிட்ட 4,000 பேருக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப், தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, தபிக்கா பெர்பாடுவானைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் ருக்குன் நெகாரா கேட்பாட்டை வாசிப்பர். மேலும் “ஹர்மோனி மடாணி” என்ற தலைப்பில் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
நிகழ்வில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்கள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பிரதமரின் உரையை கேட்கலாம்.
இந்தாண்டு தேசிய தினக் கொண்டாட்டம் புத்ராஜெயாவில் “மலேசியா மடாணி – ராக்யாட் டிசந்துனி” என்ற கருப்பொருளில் நடைபெறும்.