கோலாலம்பூர்:
சபாக் பெர்னாமில் உள்ள பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து மூன்றாம் படிவ மாணவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்ட 12 பேரில் யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 12 பேரையும் பொதுவான விசாரணைக்காக போலீசார் அழைத்து விசாரித்தனர்; ஆனாலும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் செய்தித் தொடர்பாளர் ஜே ஜே டெனிஸ் தெரிவித்தார்.
முன்னதாக, விசாரணைக்காக அழைக்கப்பட்ட12 பேரில் சிலரை “தடுத்து வைக்கப்பட்டதாக” செய்திகள் வெளிவந்தன, ஆனால் பின்னர் மந்திரி பெசார்அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அந்த வார்த்தையை திருத்தி, அவர்களை விசாரணைக்காக மட்டும் அழைத்ததாகத் தெளிவுபடுத்தியது.
இந்த தவறுக்கு மந்திரி அலுவலகம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர் ஒருவரை இனங்கண்டுள்ளதாகவும், ஆனால் அவர் தொடர்பில் எந்த அடையாளங்களும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் நிலை தொடர்பான நிலவரங்களை மாநில நிர்வாக ஆணையர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலிடம் பெறுமாறு மந்திரி பெசார் அறிவுறுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை சம்பவம் நடந்தவுடன், கல்வி அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியது. பள்ளி விடுதியிலிருந்து விழுந்த மாணவர் தற்போது உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
அதே நேரத்தில், பள்ளியின் முதல்வர், மாணவர் விவகாரங்களுக்கான மூத்த உதவியாளர் மற்றும் அனைத்து வார்டன்களும் தற்காலிகமாக சிலாங்கூர் மாநில கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.