ஷா ஆலம், கோல லங்காட்ட பண்டார் ரிம்பாயுவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் இரண்டு வயது சிறுமியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நர்சரி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்றொரு நர்சரி ஆசிரியரால் சந்தேக நபரின் செயல்கள் குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவரின் தாயார் ஆகஸ்ட் 24 அன்று இரவு 9.01 மணிக்கு புகார் அளித்ததாக கோல லங்காட் OCPD கண்காணிப்பாளர் முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி தெரிவித்தார். சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் தலையில் தண்ணீர் பாட்டில் மற்றும் பால் பாட்டிலால் தாக்கி, வகுப்பறையிலிருந்து குளியலறைக்கு காலால் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 22 அன்று, ரகசிய கண்காணிப்பு கேமிரா (CCTV) காட்சிகளை மதிப்பாய்வு செய்தார். மேலும் நர்சரி ஆசிரியர் விவரித்தபடி சம்பவம் நடந்திருப்பதைக் கண்டறிந்தார் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஐந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் 38 வயதான பெண் சந்தேக நபர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், 2001 குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கண்காணிப்பாளர் அக்மல்ரிசல் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு அல்லது கோலா லங்காட் காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 03-31872222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.