கோலாலம்பூர்:
பேராக் மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தில் மேடையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை காவல்துறை மறுத்துள்ளது.
மத்திய குற்றப்புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்ததாவது, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட இந்த தவறான தகவல்கள் விசாரணையில் உள்ளன. இதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b) மற்றும் 1998 தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
“பேராக் மாநில தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது மேடையில் ஏறிய சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர் சீனப் பெண் அல்ல. அவர் 41 வயதுடைய மலாய் இனத்தைச் சேர்ந்த உள்ளூர் பெண். சிறுநீர் பரிசோதனையில் முடிவு எதிர்மறையாக வந்துள்ளது,” என்று குமார் விளக்கமளித்தார்.
மேலும், அந்தப் பெண் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 325 (வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தல்) மற்றும் பிரிவு 511 (குற்றம் செய்ய முயற்சி) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குமார் மேலும் தெரிவித்ததாவது, சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான தவறான தகவல்களை யாரேனும் வேண்டுமென்றே வெளியிட்டாலோ அல்லது பரப்பினாலோ, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.