கோலாலம்பூர்:
சிலாங்கூர், காஜாங்கில் அகதிகள் கடத்தல் கும்பலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது நபர்களை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சோதனையை குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து இந்தோனேசிய ஆண்கள், இரண்டு இந்தோனேசிய பெண்கள் மற்றும் ஒரு உள்ளூர் தம்பதியினர் அடங்குகின்றனர்.
அமலாக்க அதிகாரிகள் நடத்திய நடவடிக்கையில், நான்கு இந்தோனேசியப் பாஸ்போர்ட்கள், ஏழு கைப்பேசிகள், RM1,465 ரொக்கம் மற்றும் ஒரு பெரோடுவா அல்சா வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.
ஜகாரியா மேலும் கூறுகையில், “சோதனைகளில், இரண்டு இந்தோனேசியர்கள் காலாவதியான விசாவுடன் தங்கியிருந்ததையும், மற்ற ஐந்து பேருக்கு எந்தவித செல்லுபடியாகும் ஆவணங்களும் இல்லை என்பதையும் கண்டறிந்தோம்” என்றார்.
கடந்த இரண்டு மாதங்களாக ‘தாகோர்’ என்ற பெயரில் இந்தக் குழு செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. இவர்கள் அகதிகளை மலேசியாவிற்குள் கொண்டுவர “ஒருவருக்கு RM1,500 முதல் RM2,000 வரை கட்டணம் வசூலித்துள்ளனர்,” என்று ஜகாரியா தெரிவித்தார்.
இந்த வழக்கு 2007 ஆம் ஆண்டு ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் 1959 ஆம் ஆண்டு குடிவரவுச் சட்டம் கீழ் விசாரணையில் உள்ளது என்றார்.