கிள்ளான் – அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெற உள்ள மலேசியா விளையாட்டுப் போட்டிகள் (SUKMA 2026) முன்னிட்டு, விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷா ஆலம் செக்சன் 13 பகுதியில் உள்ள டாருல் ஏஹ்சான் நீச்சல் மையம், சுபாங் துப்பாக்கி சுடும் மைதானம், பாண்டமாரான் விளையாட்டரங்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மேம்படுத்தும் பணிகள் கவனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன என விளையாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
“தற்போது மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு வசதிகள் அனைத்தும் திட்டமிட்டபடி மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஊராட்சி மன்றங்களும் இதில் தங்களது பங்கைச் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றன. இந்தப் பணிகள் மார்ச் 2026-க்குள் முடிவடையும் என்று நம்புகிறோம்,” என அவர் தெரிவித்தார்.