ஃபார்முலா 1 பந்தயத்தில் 2026-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக நுழைய உள்ள அமெரிக்காவின் 'காடிலாக்' (Cadillac F1) அணி, தனது காரின் அதிகாரப்பூர்வ வடிவமைப்பை (Livery) இன்று வெளியிடுகிறது. சூப்பர் பவுல் போட்டியின் இடைவேளையின் போது ஒளிபரப்பப்படும் ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தின் மூலம் இந்த அறிமுகம் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்த அணியை வழிநடத்துகிறது.
இந்த அறிமுகத்திற்காக நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square) ஒரு பிரம்மாண்டமான 'கவுண்ட்டவுன் பாக்ஸ்' (Countdown Box) அமைக்கப்பட்டுள்ளது. சூப்பர் பவுல் போட்டி முடிந்தவுடன் இந்த பெட்டி திறக்கப்பட்டு, உலகின் முதல் காடிலாக் எஃப்1 கார் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களான வால்டேரி போட்டாஸ் மற்றும் செர்ஜியோ பெரெஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
026-ம் ஆண்டு முதல் எஃப்1 விதிகளில் பெரிய மாற்றங்கள் வரவுள்ள நிலையில், காடிலாக் அணியின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணி தனது சொந்த இன்ஜினைத் தயாரிக்கும் வரை மற்ற நிறுவனங்களின் இன்ஜின்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க சந்தையில் ஃபார்முலா 1 பந்தயத்தின் செல்வாக்கை உயர்த்த இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.