ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்தின் பெர்சடா இன்டர்நேஷனல் கான்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற ஆசியான் டிஜிட்டல் உள்ளடக்க மாநாடு 2025–ஐ அம்மாநில மந்திரி பெசார் டத்தோ’ ஒன் ஹஃபிஸ் காஸி நேற்று (புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவராற்றிய தொடக்க உரையில் அவர் கூறியதாவது:
இம்மாநாடு ஜோகூரை ஆசியான் பிராந்தியத்துக்கான டிஜிட்டல் உள்ளடக்கத்தின் முக்கிய வாயிலாக நிலைநிறுத்துவதோடு, புதிய முதலீடுகள், உயர்தர வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும். மேலும், ஜோகூர்–சிங்கப்பூர் இடையே சிறப்பு பொருளாதார மண்டலம், மாநிலத்தின் வர்த்தகம், முதலீடு மற்றும் திறன் வளர்ச்சியை விரைவுபடுத்தும் முக்கிய திருப்பமாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்தும், “நீல பொருளாதாரம்” மற்றும் “பச்சை பொருளாதாரம்” ஆகியவற்றுக்கு அடுத்ததாக “ஆரஞ்சு பொருளாதாரம்” எனப்படும் படைப்பாற்றல் மற்றும் கலாச்சார துறைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். இசை, திரைப்படம், அனிமேஷன், கேமிங் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் போன்ற துறைகள் உலகளாவிய போட்டியில் முன்னணியில் உள்ளன; ஜோகூர் இத்துறையில் முன்னோடி நிலையைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.