Offline
Menu
ஆப்கானிஸ்தானில் பலத்த நில அதிர்வுகள்: 2,200 பேர் பலி, 3,600 பேர் காயம்
By Administrator
Published on 09/06/2025 09:00
News

காபூல்:

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 12 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் அழிவை ஏற்படுத்தியதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 4ஆம் தேதி வரை கிடைத்த தகவலின்படி, தொடர்ச்சியாக தாக்கிய நிலநடுக்கங்களில் 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 3,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், செப்டம்பர் 5ஆம் தேதி மேலும் நில அதிர்வுகள் பதிவானதால் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.

ஏற்கெனவே போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தான், இயற்கைப் பேரிடர் தாக்கத்தால் இன்னும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. நங்கர்ஹார் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 5ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது. அது தென்கிழக்கில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வகம் தெரிவித்தது. அதே நாளின் அதிகாலை, சில மணி நேரங்களுக்கு முன்பும் மற்றொரு நிலநடுக்கம் தாக்கியிருந்தது.

இதற்கு முன்பு, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஆப்கானிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த அதிர்வால் நங்கர்ஹார், குனார் மாகாணங்கள் கடுமையாக சேதமடைந்தன.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2ஆம் தேதி 5.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவானது. இதனால் மக்கள் பீதியடைந்து, மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டன. மலைகளில் இருந்து பாறைகள் சரிந்ததால், தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான வீடுகள் கற்கள் மற்றும் மரங்களால் கட்டப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளில் தங்க அஞ்சியதால், பல குடும்பங்கள் திறந்தவெளியில் தங்கியுள்ளனர்.

Comments